Tuesday, January 26, 2010

சித்தாலயம் இலச்சினை விளக்கம்



மனித குல நல்வாழ்க்கைக்காக உருவாக்கப்பட்ட "சித்தாலயம்". மனித குலத்தின் உயர்வை சித்தரிக்கும் வகையில் இதன் இலச்சினை உருவாக்கப்பட்டுள்ளது.
இயற்கையின் படைப்பில் மிக உயர்ந்த படைப்பான மனிதனின் உடல், ஐந்து ஆதாரத் தத்துவங்களான நெருப்பு, காற்று, நீர், மண், ஆகாயம் முதலியவற்றால் படைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இலச்சினையில் உள்ள தீப்பிழம்பு - நெருப்பாகவும் (ஒளி), உடுக்கை - காற்றாகவும் (ஒலி), தாமரை - நீர் தத்துவத்திற்கும், பாம்பு - மண் ஆகவும், இதைச் சுற்றியுள்ள வெற்றிடம் - வெட்ட வெளியாகவும் (ஆகாயம்) குறிப்பிடும் வகையில் உள்ளது.
இந்த இலச்சினை மேலும் ஒரு உயர்ந்த தத்துவத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. உயர் படைப்பாய் தோன்றிய மனித குலத்தில் உள்ள ஆண், பெண் எனும் பிரிவுகளில், பெண்மையின் சிறப்பினையும், மேன்மையினையும் சித்தரிக்கும் வகையில் உள்ள தாய்மை தத்துவத்தை மையக் கருத்தாகவும் கொண்டுள்ளது.
மின் ஓட்டத்தில் நேர் நிலையும் எதிர் நிலையும் சேரும்பொழுது புதிய சக்தி பிறக்கின்றது. (விளக்கு எரிதல், மின் மோட்டார் இயக்குதல் மற்றும் பல) இரு காந்தங்களில் வடக்கு முனையும், தெற்கு முனையும் சேரும்பொழுது காந்த இழுப்புச் சக்தி உருவாகின்றது. வானத்தில் ஒளி, ஒலி உண்டாகும் போது (மின்னல், இடி) மழையும், பூமியை நோக்கி புதிய மிகுமின்சக்தியை வந்தடைகின்றது. அதே போன்று தான் தாயின் கருப்பையினுள் உள்ள பெண் கருவை நோக்கி (ஒளி) ஆண் கரு (ஒலி) உட்சென்று சேரும்போது புதிய உயிர் தோன்றுகிறது.
மேற்கண்ட தத்துவத்தை, இலச்சினையில் உள்ள இசைக்கருவியான உடுக்கையிலிருந்து வெளிப்பட்ட ஒலியானது (விந்து), தீப்பிழம்பில் உள்ள ஒளியுடன் (நாதம்) சேரும் போது ஒரு புதிய உயிர் தோன்றுவதாகவும், இவ்வாறு உருவாகிய புதிய உயிருக்கு தாயின் கருப்பையில், தாயின் உடலில் இருந்து தேவையான சத்துக்களையும், பிராண வாயுவையும் அளித்து அந்த உயிரை பூமியில் வெளியே பிரசவிக்கும் வரை பாதுகாத்துக் கொண்டிருக்கும் செயலை நஞ்சுக் கொடியானது செய்கின்றது. இது இந்த இலச்சினையில் புதிய உயிரைக் காக்கும் பொருளாக பாம்பு (மண் த்ததுவம்) குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய உயர், நஞ்சுக் கொடி இரண்டும் தாயின் கருப்பையில் பனிக்குட நீரினுள் அடங்கி இருப்பதைப் போன்று, இங்கு உயிர் காரணமாக உள்ள தீப்பழம்பு (ஒளி), உடுக்கை(ஒலி), காத்தலாய் உள்ள பாம்பு (நஞ்சுக்கொடி - மண்) அனைத்தும் நீர்த்துவமான (பனிக்குட நீர்) தாமரைக்குள் அடங்கி இருப்பதாக காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு "சித்தாலயம்" இலச்சினை மனித குலத்தையும், அதில் பெண் இனத்தின் மேன்மையையும் சிறப்பிக்கின்றது.

No comments:

Post a Comment